அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200 ஆன்மிக தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் பூமி பூஜை விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.