கோப்புப்படம் 
இந்தியா

அயோத்திக்கு வருகை தரும் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாருக்கு பரிசோதனை

செய்திப்பிரிவு

நாடு முழுவதிலும் பரவியுள்ள கரோனா அச்சுறுத்தல் அயோத்தியிலும் நிலவுகிறது. இங்கு இருதினங்களுக்கு முன் ராமர் கோயிலின் பண்டிதர், பாதுகாப்பு போலீஸார் உள்ளிட்ட 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கரோனா தடுப்பு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “அயோத்தி வரும் பிரதமரைச் சுற்றி பாதுகாப்பு அளிக்க உ.பி. கமாண்டோ போலீஸார் 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 45 வயதுக்குட்பட்ட இவர்களில் சுமார் 35 பேர் பிரதமருக்கான உள்வளையப் பாதுகாப்பில் அமர்த்தப்படுவர். எனவே, இந்த 200 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவர்” என்று தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு அயோத்தி வரும் பிரதமர் மோடி, மதியம் 2 மணி வரை அங்கு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பங்கேற்கும் பூமி பூஜை விழா மேடையிலும் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன்படி, விழா மேடையில் பிரதமருடன் 4 பேர் மட்டுமே அமர்த்தப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்திய கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் பிரதமருடன் இருப்பார்கள். விழாவுக்கு அழைக்கப்பட்ட 200 பேரும் சமூக இடைவெளியுடன் அமர்த்தப்படுவர்.

SCROLL FOR NEXT