இந்தியா

வெப் சீரியல்கள், திரைப்படங்களில் இனி ராணுவக் காட்சிகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும்

செய்திப்பிரிவு

திரைப்படங்கள், சீரியல்கள், வெப் சீரியல்கள் உள்ளிட்டவை இனி ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருந்தால் அதற்கு தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலாஜி டெலிபிலிம் நிறுவனம் டிரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு என்ற தொலைக்காட்சித் தொடரின் முதல் பாகத்தை 2018-ல் ஒளிபரப்பியது. இதனையடுத்து 2ம் பாகம் ஒளிபரப்பானது.

இதில் இந்திய ராணுவத்தின் கண்ணியம் நேர்மையை குலைக்கும் காட்சிகள் இருப்பதாக பிக்பாஸ் புகழ் இந்துஸ்தானி பாபு சமீபத்தில் போலீஸில் புகார் செய்திருந்தார். இதனால் சீரியல் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ஷோபா கபூரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதே போல் ஜி-5 சேனலில் ஒளிபரப்பாகும் ‘கோட் எம்’என்ற சீரியலிலும் ராணுவத்தை தரக்குறைவாக காட்டியிருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து இந்திய ராணுவ அமைச்சகம் திரைப்பட தணிக்கை வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்திய ராணுவம் தொடர்பான வெப் சீரியல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

திரைப்பட வாரியத்துக்கு சினிமாவை தணிக்கை செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது. இணையத் தொடர்களை சென்சார் செய்யும் அதிகாரம் இல்லை. எனவே வெப் தொடர்களுக்கு தனிச்சட்டம் தான் இயற்ற வேண்டும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT