உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பக்ரீத் குர்பானிக்கான விற்பனை சூடு பிடித்துள்ளது. இதன் சந்தையில் முந்திரி, பேரீச்சம்பழம் உண்டு ஏசியில் வளர்ந்த ஆட்டின் விலை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
இன்று நாடு முழுவதிலும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகைக்காக இறைவன் பெயரில் ஆடுகள் குர்பானி அளிக்கப்படுகின்றனர். இதற்காக, கான்பூரின் தல்வார் மெஹல் ரயில் இணைப்பு பகுதியில் தற்காலிக சந்தை அமைத்து ஆடுகள் விற்பனையாகின்றன.
இதில் பைஸ் கான் என்ற இளைஞர் விற்கும் 3 ஆடுகள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன. தில்ருபா, குரு, ரங்கீலா எனப் பெயரிடப்பட்ட மூன்று ஆடுகள் ஏசி அறையிலேயே வைத்து வளர்த்துள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பைஸ் கான் கூறும்போது, ‘பயில்வான்கள் உண்னும் சத்துள்ள பொருட்களை இந்த ஆடுகளுக்கு அளித்து வந்தேன். இதில், முந்திரி, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்கள் அன்றாடம் அளித்தேன். இதனால் தான் இவற்றின் எடை சராசரி ஆடுகளை விட மிக அதிகமாக உள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இதன் எடைகள் கிலோவில் தில்ரூபா 135, குரு 110 மற்றும் ரங்கீலா 150 என வளர்ந்துள்ளன. பார்பதற்கு அழகாகவும், நல்ல உஅயரத்துடன் கம்பீரமாகவும் உள்ள ஆடுகள் வாங்க வாடிக்கையாளர்கள் இடையே போட்டியும் இருந்துள்ளது.
இவற்றின் விலையை ரூ.50,000 முதல் 3.5 லட்சம் வரை நிர்ணயித்து விற்பனை செய்துள்ளார். இவற்றை விலைக்கு வாங்கியவர்கள் வருமானவரித்துறையினருக்கு அஞ்சி தம் பெயரை வெளிப்படுத்தாமல் சென்றுள்ளனர்.
இன்று துவங்கிய பக்ரீத் திருநாள், வட இந்தியாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இம்மூன்று
தினங்களிலும் ஆடு, எருமை மற்றும் ஒட்டகங்கள் குர்பானி செய்யப்படுகின்றன.