அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு தலித் பிரிவைச் சேர்ந்த துறவியும் அழைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரான அவர் இதன் மீதான கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 இல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோஹன் பாக்வத் உள்ளிட்ட 200 முக்கியப் பிரமுகர்கள் மட்டும் அழைக்கப்படுகின்றனர்.
இந்துக்களின் மடங்களை சேர்ந்த முக்கிய சாதுக்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் தலித் சமூகத் துறவிக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை என பிரயாக்ராஜில் உள்ள தலித் சமூகத்தின் துறவியான மஹாமண்டலேஷ்வர் சுவாமி கன்னைய்யா பிரபுநந்தன் கிரி புகார் தெரிவித்துள்ளார்.
இதை குறிப்பிட்ட மாயாவதி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘தலித் மஹாமண்டலேஷ்வர் சுவாமி கன்னைய்யா பிரபுநந்தன் புகாரின்படி அவரும் ஆகஸ்ட் 5 இல் அயோத்தியின் ராமர் கோயில் பூமி பூஜைக்கு 200 பேர்களில் ஒருவராக அழைக்கப்பட வேண்டும்.
இது நம் நாட்டின் அரசியலமைப்பின்படி மதசார்பற்ற சமூகம் அமைக்கும் நோக்கத்திற்கு உதவும்.’ எனக் குறிப்பிட்டவர் மற்றொரு ட்விட்டும் பதிவு செய்துள்ளார்.
தனது இரண்டாவது ட்விட்டில் மாயாவதி, ‘சாதிபாகுபாடுகளினால் தலித்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பாதையை பின்பற்ற வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சரத்பவார் கருத்து
இதனிடையே, ராமர் கோயில் பூமி பூஜைக்கான விழா மீது சில அரசியல் கட்சித் தலைவர்களும் தம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில், மகராஷ்டிரா மாநிலத்தின் கூட்டணி ஆட்சி புரியும் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து சரத்பவார் கூறும்போது, ‘நாட்டின் கோவிட் பரவலை, கோயில் கட்டுவதால் தடுத்துவிட முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு முன்னதாக தனது ‘சம்னா’ பத்திரிகையில் முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்தை பதிவிட்டிருந்தார்.
உத்தவ் தாக்கரே யோசனை
அதில் முதல்வர் உத்தவ், ‘கோவிட் பரவலால் ராமர் கோயிலின் பூமி பூஜையை இணையதளம் வழியாக நடத்தலாம். கட்டுக்கடங்காமல் ராமபக்தர்கள் அயோத்தியில் திரண்டு விட்டால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேள்வியும் எழுப்பியிருந்தார்.
அசாத்தீன் ஓவைஸியின் எச்சரிக்கை
இந்தவகையில் கடைசியாக அகில இந்திய இத்தாஹாதுல் மஜ்லீஸ் எ முஸ்லீமின் கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பியுமான அசாசுத்தீன் ஓவைஸியும் தன் கருத்தை கூறி இருந்தார். அதில் அவர் நாட்டின் பிரதமரான மோடி பூமி பூஜையில் கலந்துகொள்வது அவரது அரசியலைமைப்பு சட்டத்தின்படி எடுத்த உறுதிமொழியை மீறுவதாகும் என எச்சரித்திருந்தார்.