இந்தியா

ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஆலோசனை: யோகி ஆதித்யநாத் நாளை அயோத்தி பயணம்

செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பாக ஆலோசிக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை அயோத்தி செல்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார். அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கு பெறுவர் என்று தெரிகிறது.

இதையடுத்து கடந் சில தினங்களுக்கு முன்பு அயோத்தி சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாகவும், கட்டுமானப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் யோகி ஆதித்யநாத் நாளை அயோத்தி செல்கிறார்.

அயோத்தி அறக்கட்டளை நிர்வாகிகள், பல்வேறு மடாதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. கரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். இருப்பினும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT