இந்தியா

நீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஏஎன்ஐ

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-ன் பிரிவு 2-சி (i)-யின் அரசியல் சாசன ரீதியான செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மூத்தப் பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட இந்த மனுவில் கோர்ட் அவமதிப்புச் சட்டத்தின் இந்த துணைப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அரசியல் சாசன முகவுரையில் போற்றிப் பாதுகாக்கப்பட்ட மதிப்புகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

இந்த மனு இன்னும் ஒருவாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் ட்வீட்களை முன் வைத்து உச்ச நீதிமன்றம் தானாகவே கவனமேற்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்கியுள்ளது. பூஷண் தனது ட்வீட்களில் உச்ச நீதிமன்றத்தைத் தாக்கி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு, அதாவது கடந்த 6 ஆண்டுகளில் ‘இந்திய ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றமும் பங்காற்றி உள்ளது’ என்று சாடியிருந்தார். இதுதான் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் ஒரு பிரிவு அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 19 மற்றும் 14-ஐ மீறுவதாக உள்ளது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘இந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவு சுதந்திரப் பேச்சுரிமையை குறுக்குகிறது. அதாவது அந்தப் பேச்சுரிமையினால் பெரிய தீங்கெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் பிரிவு பேச்சுரிமை, கருத்துரிமையை ஏதோ தீங்கு விளைவிப்பது போல் காட்டுகிறது.

இந்தப் பிரிவு தண்டனைகளை கொண்டுள்ளதோடு, சரிசெய்ய முடியாத அளவுக்கு புரியாமையில் உள்ளது, அதாவது தெளிவற்ற சொற்பதங்களைப் பயன்படுத்தி அதன் வரம்புகளை தெளிவாக வரையறை செய்ய முடியாமல் ஆக்கியுள்ளது.

அரசியல் சாசன்ம் 14ம் பிரிவு சமமாக நடத்தப்படுவதை வலியுறுத்துவதோடு தன்னிச்சைத் தன்மை இருக்கக் கூடாது என்றும் கூறுகிறது.’ இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT