ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என்ற முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டத்தை முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுநரும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்ததையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மறு அமைப்பாக்க சட்டம், 2014-க்கு எதிரானது என்று கவர்னர் முடிவையும் விமர்சித்துள்ளார்.
ஆந்திர அரசு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட இரண்டு அறிவிக்கைகளில் ‘ஆந்திர மாநில அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அனைத்துப் பகுதிகளின் உள்ளடக்கையவ் வளர்ச்சி சட்டம் 2020, மற்றும் தலைநகர மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2020 ஆகியவை பற்றி முன்மொழிவுகளை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
அமராவதியை அழிப்பதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்தவர்கள் துன்பத்தில் இன்பம் காண்கிறார். எதிக்கட்சியாக இருந்த போது அமராவதி தலைநகராக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்பினார், ஆனால் இன்று அமரவாதியை அழிக்கப் பார்க்கிறார். 3 தலைநகரங்கள், உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
முதல்வரின் இத்தகைய முயற்சியை வளர விட்டால் அது ஆந்திராவின் வளர்ச்சியை அடியாழத்துக்குக் கொண்டு சென்று விடும், வறுமை பெருகும். முதல்வர் ஜெகன்மோகன் துக்ளக் தர்பார் நடத்துகிறார். அமராவதியின் 29,000 விவசாயிகள் மட்டுமல்ல 5 கோடி மக்களின் நீண்ட கால கனவையும் ஜெகன்மோகன் குழிதோண்டிப் புதைக்கப்பார்க்கிறார்.
இவரது முடிவு எதிர்காலச் சந்ததியினரையும் பாதிக்கும்.
இதனையடுத்து அமராவதி இணைச் செயல் கமிட்டியின் போராட்ட அழைப்பில் தெலுங்கு தேசமும் கலந்து கொள்ளும். தலைநகரை மாற்றும் முடிவுக்கு எதிராக தீவிரப் போராட்டம் நடத்துவோம்.
ஆந்திர வரலாற்றில் இது கறுப்பு வெள்ளியாகவே பார்க்கப்படும்.
இவ்வாறு சாடினார் சந்திரபாபு நாயுடு.