அயோத்தியில் புதிய மசூதி தேவையில்லை என உத்திரப்பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஜ்வீ கூறியுள்ளார். இதை அவர் நேற்று ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அயோத்தியில் சந்தித்த பின் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பின்படி அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீண்டும் கட்டுவதற்காக அயோத்தி நகருக்கு வெளியே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உ.பியின் சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் சார்பில் புதிதாக ஒரு அறக்கட்டளை அமைத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இச்சூழலில், உபியின் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவே பேசி வரும் வசீம் ரிஜ்வீ மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான வசீம் ரிஜ்வீ நேற்று அயோத்தி வந்திருந்தார். கர்சேவக்புரம் சென்றவர் அங்குள்ள விஷ்வ இந்து பரிஷத்தினால் செய்து வைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கானக் கல்தூண்களை பார்வையிட்டார்.
பிறகு அங்கு தங்கியிள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராயுடன் சந்திப்பு நடத்தினார். பிறகு அயோத்தியின் முக்கிய மடங்களில் ஒன்றான திகம்பர் அகாடாவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸுடனும் சந்தித்து பேசினார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வசீம் ரிஜ்வீ கூறுகையில், ‘அயோத்தியில் தொழுகை நடத்துபவர்கள் குறைவாக உள்ளனர். இதனால், இங்கு புதிய மசூதி கட்டவேண்டிய தேவையில்லை.
அயோத்தி என்னுடைய தாய் வீடு போன்றது. இங்கு கட்டப்பட உள்ள ராமர் கோயில் எனது நீண்ட கால விருப்பம் ஆகும்.’ எனத் தெரிவித்தார்.
அயோத்தி விவகாரத்தில் ஷியா முஸ்லிம்களின் தலைவர் ரிஜ்வீ துவக்கம் முதலாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சன்னி பிரிவு முஸ்லிம்களின் மற்ற விஷயங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துக்கள் கண்டனத்திற்கு உள்ளாகின.
டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ரிஜ்வீ கூறி இருந்தார்.
இதற்கு அவர் சார்ந்த ஷியா முஸ்லிம் பிரிவு சமூகத்தின் மற்றொரு முக்கிய தலைவரான கல்பே ஜாவீத் கடுமையாகக் கண்டித்திருந்தார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் உபி, டெல்லியில் போராட்டம் நடத்துவதாகவும் ஜாவீத் எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது