ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது.
தற்காலிக சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் அமராவதியில் கட்டப்பட்டன. ஆந்திராவின் தலைமைச் செயலக ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு இடம்மாறினர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் அரசு, அமராவதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
கடந்த 2019 ஏப்ரலில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு கடந்த ஆட்சியின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் ஆந்திரா வுக்கு 3 தலைநகரங்கள் உருவாக் கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார்.
அதன்படி அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டி னத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து மக் களின் கருத்துகளை அறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.என்.ராவ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு 3 தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஜி.என்.ராவ் கமிட்டி அரசிடம் அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கையை பரிசீலனை செய்ய ஆந்திர அரசு தரப்பில் உயர்நிலை கமிட்டி அமைக் கப்பட்டது. இந்தக் கமிட்டியும் அரசின் முடிவுக்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்தது. இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில் 3 தலைநகர்களுக்கான மசோதா கடந்த ஜனவரியில் சட்டப்பேரவை யில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேநாள் மேலவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆளும் கட்சிக்கு சட்டப்பேரவை யில் பெரும்பான்மை பலம் இருப் பதால் மசோதா எளிதில் நிறைவேற் றப்பட்டது. ஆனால் மேலவையில் ஆளும் கட்சிக்கு பலம் குறைவாக இருந்ததால் அந்த அவையில் மசோ தாவை நிறைவேற்ற முடிய வில்லை. இதைத் தொடர்ந்து மேலவை கலைக்கப்பட்டது. கடந்த ஜூன் 16-ம் தேதி 3 தலைநகர் களுக்கான மசோதா சட்டப்பேரவை யில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, 3 தலைநகர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமராவதியில் விவசாய குடும் பத்தினர் போராட்டம் நடத்தினர். தெலுங்குதேசம் கட்சி உட்பட பலர் இத்திட்டத்தை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வ பூஷண் ஹரிசந்தன், 3 தலைநகர் சட்ட மசோதாவுக்கு நேற்று ஒப்பு தல் அளித்தார். மேலும், சிஆர்டிஏ எனப்படும் முந்தைய அரசின் தலைநகர் கொள்கை சட்டத்தையும் ஆளுநர் ரத்து செய்தார். இதன் மூலம் 3 தலைநகர்களை உருவாக்க சட்டரீதியாக எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கியுள்ளன.
இனிமேல் அமராவதியில் சட்டப் பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூ லில் உயர் நீதிமன்றமும் செயல் படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு காலகட்டத்தில் சென்னை மாகாணம் ஆந்திராவின் தலை நகராக செயல்பட்டது. மொழிவாரி யாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவும் தமிழகமும் தனித்தனியாக பிரிந்தன.
நிஜாம் மன்னர்கள் ஆண்ட நிஜாம் பகுதிகளும் தெலங்கானா வும் ஆந்திராவுடன் இணைந்தன. தெலங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா என 3 பகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரா உருவானது.
அதன்பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கை வலுத்து, போராட்டம் தீவிரமடைந்தது. இறுதி யில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனியாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத் துக்கு ஹைதராபாத் தலைநகர மானது.
ஆந்திராவுக்கு தலைநகர் பிரச் சினை எழுந்ததால் மாநிலத்தின் மையப்பகுதியான கிருஷ்ணா - குண்டூர் இடையே புதிய தலை நகராக அமராவதி நிர்மாணிக்கப் பட்டது. ஆட்சி மாறியதால் தற் போது ஆந்திராவுக்கு 3 தலை நகரங்கள் உருவாகி உள்ளன.