இந்தியா

கரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைகிறது: ஹர்ஷ வர்தன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

உலகளவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகவும் இறப்பு வீதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

கோவிட் -19 குறித்த மத்திய அமைச்சர்கள் குழுவின் 19-வது கூட்டம், புது டெல்லியில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைக்சசர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கப்பல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரசாயணம், உரங்கள் துறை இணையமைச்சர் மன்சுக் லால் மண்டாவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசுகையில் ‘‘10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதன் மூலம், குணமடைவோர் வீதம் இதுவரை இல்லாத அளவாக, 64.54 சதவீதம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது. இதன் மூலம், தற்போது 33.27 சதவீதம் அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உயிரிழப்போர் வீதம் படிப்படியாக குறைந்து வருவதுடன், தற்போது 2.18 சதவீதம் என்ற அளவில் இருப்பதன் மூலம், உலகில் உயிரிழப்பு குறைவான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது” என டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இந்தியாவில் காணப்பட்ட நோய்த் தொற்றின் தீவிரம் குறித்துப் பேசிய டாக்டர் ஹர்ஷ வர்தன், “தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையில் 0.28 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் பொருத்தப்பட்ருப்பதுடன், 1.61 சதவீதம் நோயாளிகளுக்குத் தான் தீவிர சிகிச்சைப் பிரிவின் உதவியும், 2.32 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது” என்றார்.

இந்தியாவில், தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இன்றைய நிலவரப்படி, மொத்தம் 1,131 ஆய்வுக் கூடங்கள் (911-அரசு ஆய்வகங்கள் மற்றும் 420 தனியார் ஆய்வுக் கூடங்கள்) வாயிலாக, கடந்த 24 மணி நேரத்தில், ஒரு சாதனை அளவாக, இந்தியாவில் 6,42,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை, 1.88 கோடியைத் தாண்டியுள்ளது.

தனிநபர் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஹைட்ராக்சி குளோரோ குயின் போன்ற மருந்துகளை, பல்வேறு பிரிவுகள் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர்கள் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மருத்துவ உபகரணங்கள் விநியோகத்தைப் பொறுத்தவரை, இதுவரை மொத்தம் 268.25 லட்சம் என்.95 முகக் கவசங்கள், 120.40 லட்சம் தனிநபர் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள், மற்றும் 1083.77லட்சம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், மாநில/ யூனியன் பிரதேச மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT