இந்தியா

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் ஓட்டலில் இருந்து ஜெய்சால்மருக்கு மாற்றம்: பேரம் நடப்பதாக எழுந்த புகாரால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்எல்ஏக்களை எதிர்தரப்பினர் தங்கள் பக்கம் இழுத்து விடாமல் தடுக்கும் பொருட்டு ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் அவசர அவசரமாக ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். ஆனால், தனக்கு பெரும்பான்மை இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 3 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பினார். 4-வது முறையாக அமைச்சரவை அனுப்பிய கடிதத்தை ஏற்ற ஆளுநர் மிஸ்ரா, ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தபின், எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க பேரம் பேசுவது அதிகரித்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை எதிர்தரப்பினர் தங்கள் பக்கம் இழுத்து விடாமல் தடுக்கும் பொருட்டு ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் அவசர அவசரமாக ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் ஜெய்சால்மர் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT