இந்தியாவில் மொத்தம் 1.82 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கூட்டு மற்றும் தீவிர கவனிப்பு முயற்சிகளின் பலனாக, கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐசிஎம்ஆர், பரிசோதனை உத்திகளை வகுத்து, இந்தியா முழுவதும் சோதனை கட்டமைப்பை விரிவு படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 4,46,642 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. சராசரி தினசரி சோதனைகள் ( வாராந்திர அடிப்படையில்) ஜூலை முதல் வாரத்தில் 2.4 லட்சத்தில் இருந்து, கடைசி வாரத்தில் 4.68 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு தற்போது 1321 ஆய்வகங்களாக உள்ளது; அரசு துறையில் 907 ஆய்வகங்களும், தனியார் துறையில் 414 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு;
• ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 676 ( அரசு-412 + தனியார்-264)
• ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 541 (அரசு-465 + தனியார்-76)
• சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள் ; 104 (அரசு-30+ தனியார்-74)
அதிகரிக்கப்பட்ட பரிசோதனை கட்டமைப்பு காரணமாக , மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 88 லட்சத்தில் இருந்து ( 2020 ஜூலை 1) சுமார் 1.82 கோடியாக (2020 ஜூலை 30) உயர்ந்துள்ளது.
சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 13,181 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் ‘’ சோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தல்’’ உத்தியின்படி, நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், நாடு முழுவதும், தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. தற்போது, 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.