இந்தியா

புதிய கல்விக் கொள்கையில் அங்கம் வகித்ததற்குப் பெருமைப்படுகிறேன்: அமைச்சர் ஸ்மிருதி இரானி

பிடிஐ

புதிய கல்விக் கொள்கையில் அங்கம் வகித்ததற்காகப் பெருமைப்படுகிறேன் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

எனினும் இதன் முக்கிய அம்சங்களுக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சரும் முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி, புதிய கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், ''பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முழுமையான, விரிவான ஆலோசனைகளின் விளைவே தேசிய கல்விக்கொள்கை ஆகும். 2015-ல் இதற்கான தொடக்கப்புள்ளியில் அங்கம் வகித்ததற்காகப் பெருமை கொள்கிறேன். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சிகளுக்குத் துணை நின்றதற்காக அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகருக்கும் ரமேஷ் பொக்ரியாலுக்கும் நன்றிகள்.

இந்தியக் கல்வி முறையில் தேவையான மாற்றத்துடன் மறுகட்டமைப்பு நடைபெற இக்கொள்கை உதவும். இது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு கட்டக் கற்றலிலும் தொழில்நுட்பத்தையும் டிஜிட்டல் மயமாக்கலையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

தரமான ஆரம்பக் கட்டக் கல்வியை வழங்கும் வகையில் குழந்தைகளின் முன்பருவக் கவனிப்பு மற்றும் கல்வியில் புதிய கல்விக்கொள்கை கவனம் செலுத்தியுள்ளது. 3 முதல் 6 வயது வரையான குழந்தைகளுக்கு அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் மூலம் இது நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT