காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

ரஃபேல் போர் விமானங்கள் வருகைக்கு காங்கிரஸ் வரவேற்பு: மத்திய அரசுக்கு 3 கேள்விகள் எழுப்பிய ராகுல் காந்தி

பிடிஐ

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் நேற்று அம்பாலா விமானப் படைத்தளம் வந்தமைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக மத்திய அ ரசுக்கு 3 கேள்விகளையும் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஒப்பந்தம் செய்திருந்தது.

டாசல்ட் நிறுவனம் முதல்கட்டமாக 36 விமானங்களில் 10 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளன. இதில் 5 விமானங்கள் பிரான்ஸில் இந்திய வீரர்கள் பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 5 விமானங்களும் பிரான்ஸின் துறைமுக நகரான போர்டாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டு அன்று இரவே ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தார்ஃபா விமானப்படைத்தளத்துக்கு வந்து சேர்ந்தன.

அங்கிருந்து நேற்று காலை 11 மணி அளவில் புறப்பட்டு இந்திய நேரப்படி பிற்பகல் 3.25 மணிஅளவில் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின.
ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளதை வரவேற்றுள்ள காங்கிரஸ்எம்.பி. ராகுல் காந்தி, 3 கேள்விகளையும் மத்திய அரசுக்கும் முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ ரஃபேல் போர் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள். 3 கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் அளிக்க முடியுமா.

  1. ஒவ்வொரு ரஃபேல் விமானத்தையும் ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் ரூ.1,670 கோடிக்கு வாங்கப்பட்டது?
  2. 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்து ஏன் 36 விமானங்கள் வாங்கப்பட்டன?
  3. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு பதிலாக, திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது? எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்ததை வரவேற்கிறோம். விமானப்படையில் இருக்கும் துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு வாழ்த்துகள். ரூ.526 கோடிக்கு வாங்க வேண்டிய ரஃபேல் விமானத்தை ஏன் ரூ.1670 கோடிக்கு ஒவ்வொரு விமானத்தையும் வாங்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் கேள்வி கேட்க வேண்டும்.

126 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏன் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டன என்று கேள்வி கேட்க வேண்டும். மேட் இன் இந்தியா திட்டதில் ரஃபேல் விமானங்கள் தயாரிக்காமல் பிரான்ஸில் விமானங்கள் ஏன் தயாரிக்கப்பட்டன. ஒப்பந்தம் போடப்பட்டு 5 ஆண்டுகள் விமானங்களை ஒப்படைக்க தாமதம் ஏன் என்று கேள்வி கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT