கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு அக்டோபரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பள்ளிகள் செயல்படும் நாட்களை 210-ல் 120 ஆக குறைத்துள்ளது. எனவே கர்நாடக பாடநூல் நிறுவனம், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடங்களின் அளவை 35 சதவீதமாக குறைத்துள்ளது.
இதில் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் யேசு கிறிஸ்து, முகமது நபிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் தொடர்பான பாடத்தை நீக்கியுள்ளது.
இதேபோல 7-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் 6-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் திப்பு சுல்தான் குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லை.
இந்நிலையல் இந்த பாடநீக்கத்துக்கு இஸ்லாமியர், கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மஜதவை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, “கடந்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசு சார்பில் கொண்டாடப்படும் திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்தது. இந்த ஆண்டு பாட நூலில் இருந்து திப்பு சுல்தான் பாடத்தை நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போர் புரிந்தவர் என்ற முறையில் அவரை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “திப்பு சுல்தான் கர்நாடகாவுக்கும், கன்னட மொழிக்கும் பெருமை சேர்த்தவர். சுதந்திர போராட்ட வீரரான அவரை பாஜக இஸ்லாமியராக மட்டுமே அணுகுவது மிகவும் தவறானது.
ராக்கெட், பீரங்கி ஆகியவற்றை பயன்படுத்தி போர் புரிந்த திப்பு சுல்தானின் வீரத்தை ஆங்கிலேயர்களே வியந்தனர். அவரது பாடத்தை நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக அரசு இதைச் செய்துள்ளது. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.