இந்தியா

ராணுவ அதிகாரிகள் விரைவில் மீண்டும் பேச்சு; லடாக் எல்லையில் படைகள் குறைப்பு: சீன வெளியுறவுத் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும்பாலான இடங்களில் சீனா - இந்தியா இருதரப்பு படைகளும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக சீனவெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறிநடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, எல்லையில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது. சுமூக நிலையை ஏற்படுத்த இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் அளவிலும் தூதரக ரீதியாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விரைவில் ராணுவ கமாண்டர்கள் அளவில் 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக தொடர்ந்து இரு தரப்பிலும் பெரும்பாலான இடங்களில் படைகள் குறைக்கப்பட்டு விலக்கிக் கொள்ளப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் பேட்டியளித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘‘இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் 4 முறை ராணுவ கமாண்டர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. இரு தரப்பும் 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன. லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் தொடர்ந்து படைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. சூடு தணிந்து சுமூகமான நிலையை நோக்கிச் செல்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் இதேபோல செயல்பட்டு எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் லட்சியத்தை அடைவதற்கு பணியாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த பேச்சுக்களை தொடர்ந்து எல்லையில் படைகளை விரைவாகவும் முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்தியா தரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT