இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்குப் புதிதாக 48 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக நாள்தோறும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி, 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 64.51 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 768 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி 28-ம் தேதி வரை ஒரு கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மட்டும் 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேருக்குப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 282 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 988 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 88 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,881 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 13 ஆயிரத்து 198 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,372 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 64,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 102 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,055 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் 10,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.