இந்தியாவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் விகிதம் 2.25 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது இது 2.25 சதவீதமாக உள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த அளவில் மரணமடைபவர்கள் என்ற எண்ணிக்கையைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துவது; பரிசோதனைகளை அதிகரிப்பது; மருத்துவப் பரிசோதனைக்காக தரமான விதிமுறைகள்; முழுமையான நோய் சிகிச்சை அணுகுமுறை; நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாத நோயாளிகளுக்கு வீட்டிலேயே மருத்துவ மேற்பார்வையுடன் கூடிய தனிமைப்படுத்துதல் இதனால் மருத்துவமனைகளுக்கு அதிக சுமை இல்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறமையாகச் செயல்படுத்தி, அதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, திறமையான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைவோர் எண்ணிக்கையைக் குறைக்க கவனம் செலுத்தின. களத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக நோயால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் மூலமாக, நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. ஜூன் மாத மத்தியில் 3.33 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 2.25 சதவீதமாக உள்ளது.
மூன்று அடுக்குகள் கொண்ட மருத்துவமனைக் கட்டமைப்பு, நோயாளிகளை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிப்பது, ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு நோய் மேலாண்மை நடவடிக்கைகள் காரணமாக, குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக, நாட்டில் நாளொன்றுக்கு முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்து வருகிறார்கள்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களை முன்னதாகவே கண்டறிந்து தனிமைப் படுத்துவதில், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளும், மத்திய அரசும் கவனம் செலுத்தி வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் குழுக்கள், அனைத்து மாநில/ யூனியன் பிரதேச மருத்துவமனைகளுக்கும் வழிகாட்டுகின்றனர். மத்திய குழுக்களும் அவ்வப்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிடுகின்றன.
இந்த நடவடிக்கைகளாலும், நோயிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஜூன் மாத மத்தியில் சுமார் 53 சதவிகிதமாக இருந்த குணமடைபவர்களின் எண்ணிக்கை தற்போது 64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 35 ஆயிரத்து 576 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 9 லட்சத்து 52 ஆயிரத்து 743 பேர் குணமடைந்துள்ளனர்.
நாள்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைபவர்களின் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியும் அதிகரித்து வருகிறது. தற்போது இது 4 லட்சத்து 55 ஆயிரத்து 755. அதாவது, தற்போது 4 லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.