அயோத்தியில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினர்களுக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளை தரப்பில் கூறுகையில், உ.பி. சன்னி மத்திய வக்பு வாரிய தலைவர் சஃபர் ஃபரூக்கி, உ.பி. ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, அயோத்தி நில விவகார வழக்கில் மனுதாரரான இக்பால் அன்சாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்பால் அன்சாரி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் வழ்க்கு தொடந்த முகமது ஹஷிம் அன்சாரியின் மகனாவார்.
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தலைவர் மோஹன் பாகவத், பொதுச் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி கூறும்போது, “அரசியல் கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை, ஏனெனில் கட்சிகளிடையே பேதம் காட்ட விரும்பவில்லை, ராமர் கடவுள் அனைவருக்குமானவரே. அழைப்புவிடுக்காதவர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.