கர்நாடக வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் (இடது), சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி (வலது) 
இந்தியா

கர்நாடகாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்தது: 2 அமைச்சர்கள்,15 எம்எல்ஏ.,க்களுக்கு தொற்று உறுதி

இரா.வினோத்

கர்நாடகாவில் அமைச்சர்கள் ஆனந்த் சிங், சி.டி.ரவி உட்பட 1 லட்சத்து 1465 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1465 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1953 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பெங்களூருவில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் 11 ஆயிரம் பகுதிகளில் மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பா தனியார் மருத்துவமனைகள் கட்டாயமாக 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில் இனி ஊரடங்கு அமல்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங்குக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த கார் ஓட்டுநர், உதவியாளர், நண்பர் உள்ளிட்ட 5 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த் சிங் உள்ளிட்டோர் பெல்லாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1 சட்டமேலவை உறுப்பினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT