பிரான்ஸின் டாசால் நிறுவனத்திடமிருந்து 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு வாங்கிய ரஃபேல் அதிநவீன போர்விமானங்களில் முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் ஹரியாணா அம்பாலா விமானப்படைத் தளத்தை வந்தடையும்.
மே மாதம் இறுதியில் ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக 11 வாரங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.
ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக 4 விமானங்களை மே மாத இறுதியில் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைப்பதாக திட்டமிட்டிருந்தது. ரஃபேல் விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானிகள் அடங்கிய 2 குழுக்கள் பிரான்ஸ் சென்று பயிற்சி எடுத்துள்ளது.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால் போர் விமானங்களை ஒப்படைப்பதில் சிக்கல் எழுந்து 11 வாரங்கள் தாமதமாக நாளை மறுநாள் இந்தியா வந்தடைகின்றன.
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டபின் விமானப் படையின் பலம் மேலும் அதிகரிக்கும். கிழக்கு லடாக்கில் இந்திய எல்லையில் சீனா மோதலில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ரஃபேல் விமானத்தின் வருகை பெரும் ஊக்கத்தைத் தரும்.
பிரான்ஸிலிருந்து விமானம் புறப்படும் முன் இந்திய விமானிகளுடன், பிரான்ஸுக்கான இந்தியத் தூதர் ஜாவித் அஷ்ரப் பேசியுள்ளார்.
அதன்பின் இந்திய தூதரகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ பயணம் சிறக்க வாழ்த்துகள், பிரான்ஸுக்கான இந்தியத் தூதர் ரஃபேல் விமானத்தை இயக்கும் விமானிகளுடன் பேசினார். பாதுகாப்பாக இந்தியாவுக்கு பயணிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டு சேர்க்கப்படும் என்றாலும், ஆகஸ்ட்மாதம் நடுப்பகுதியில்தான் முறைப்படி படையில் சேர்க்கப்படும்.
இப்போதுள்ள சூழலில் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2-ம் கட்டமாக வரும் விமானங்கள் மேற்கு வங்கம் ஹசிமரா தளத்திலும் நிறுத்தப்படும். மொத்தம் 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள்.
இதில் இரட்டை இருக்கை கொண்டவை, ஒரு இருக்கை கொண்டவை போர் விமானம். இந்த இரு படைத்தளத்திலும் ரஃபேல் விமானங்களை நிறுத்தவும், பராமரிக்கவும் ரூ.400 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை விமானப் படை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.