கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரே திருமணத்தில் பங்கேற்ற மணமகள், மணமகன் உள்பட்ட 43 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பேரிடர் மேலாண்மை விதிகளை மீறி அதிகமான நபர்களைத் திருமணத்தில் பங்கேற்க வைத்த திருமண வீட்டார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இம்மாதத் தொடக்கத்தில் சேர்கலாவில் ஒரு இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களில் 44 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களோடு தொடர்பில் உடைய 544 பேர் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் அடுத்த ஹாட் ஸ்பாட்டாக திருமண வீடு அமைந்துள்ளது.
காசர்கோடு மாவட்டம், செங்கலா பஞ்சாயத்தில் கடந்த 17-ம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், திருமணத்தில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்ற விதிமுறை இருந்து வருகிறது. ஆனால், இந்தத் திருமணத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, திருமணத்தில் பங்கேற்றவர்களைப் பட்டியல் எடுத்து மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். இதில் மணமகன், மணமகள், மணமகனின் தந்தை உள்பட்ட 43 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், இந்தத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் டி சஜித் பாபு கூறுகையில், “இந்தத் திருமணத்தில் பங்கேற்ற 128 பேரைக் கண்டுபிடித்து அவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை நடத்தினோம். அதில் 43 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறி திருமணத்தில் அதி்கமானோரைப் பங்கேற்க வைத்துள்ளதால், திருமண வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண வீட்டார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் “ எனத் தெரிவித்தார்.
செங்கலா பஞ்சாயத்தின் பிளங்கட்டா வார்டு உறுப்பினர் அப்துல்லா குன்னி கூறுகையில், “இது மிகப் பெரிய திருமணமாக நடக்கவில்லை. திருமண வீட்டாரின் உறவினர்கள் மட்டும்தான் பங்கேற்றனர். அவர்களின் குடும்பம் பெரியது. 4 குடும்பத்தார் மட்டுமே வந்திருந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும 30 பேர் வரை வந்திருந்தார்கள். இதில் ஒரே வீட்டில் 30 பேர் தங்கியிருந்தார்கள். அந்த வீட்டில் தங்கியிருந்த 30 பேரில் 9 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மணப்பெண்ணின் வீட்டிலிருந்து வந்திருந்த 30 பேரில் 15 பேருக்குக் கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு குடும்பத்தைத் தவிர்த்து வெளியாட்கள் மிகச் சிலரே வந்திருந்தார்கள்” எனத் தெரிவித்தார்.