வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தினசரி 5 வேளை அனுமன் சாலீஸா திருமந்திரத்தை ஓதினால் கரோனா வைரஸ் பிரச்சினையை ஒழித்து உலகை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதி பாஜக எம்.பி., பிரக்யா சிங் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கரோனா வைரஸ் பிரச்சினைக்கு முடிவு கட்டவும் மக்கள் நலமாக இருக்கவும் நாம் அனைவரும் இணைந்து
பக்தி முயற்சியில் இறங்குவோம். ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தினசரி 5 வேளை அனுமனை நினைத்து அனுமன் சாலீஸா மந்திரத்தை சொல்வோம். ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த பாராயணத்தை முடித்துக் கொண்டு வீட்டிலேயே ராமருக்கு தீப ஆராதனை செய்வோம். அனுமன் சாலீஸா மந்திரத்தை நாடு முழுவதும் ஒரே குரலாகஒலித்தால் அதன்மூலம் கரோனாவை ஒழித்து விடலாம். ராமரிடம் இந்த பிரார்த்தனையை வைப்போம்" என தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவுடன் ஆகஸ்ட் 4 வரை ஊரடங்கை அமல்படுத்தி கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய பிரதேச பாஜக அரசு முழு முயற்சி எடுத்து வருவதாகவும் வீடியோ பகிர்ந்துள்ளார்.