அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடை அளித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ராமஜென்பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி பெஜாவர் மடத்தின் தலைவர் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். சமீபத்தில் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் காணொலி மூலம் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்றிருந்தார்.
அதுகுறித்து அவர் கூறுகையில் ,“அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 3 முதல் 5-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எனது கருத்தைக் கூறினேன்.
அதில் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்ட நாடு முழுவதும் மக்களிடம் நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் நன்கொடை கேட்கலாம். குடும்பத்துக்கு ரூ.100 வீதம் கேட்கலாம் என்று தெரிவித்தேன்.
இது என்னுடைய யோசனை மட்டும்தான். மக்களுக்கான வரி அல்ல. ராமர் கோயில் கட்டும் பணியில் தங்களை ஆத்மார்த்தமாக இணைத்துக்கொள்ள விரும்பும் பக்தர்கள், மக்களுக்கான ஒரு செயல்திட்டம்தான்.
ஆனால், கடவுள் ராமர் மீது நம்பிக்கை இருக்கும், எந்த பக்தர்கள் நன்கொடை அளித்தாலும் அது ஏற்கப்படும்” எனத் தெரிவித்தார்
எந்த மதத்தைச் சேர்ந்தவரும் நன்கொடை அளிக்கலாம் அல்லது இந்துக்கள் மட்டும்தான் நன்கொடை வழங்க வேண்டுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரசன்ன சுவாமி பதில் அளிக்கையில், “கடவுள் ராமர் மீது நம்பிக்கையும், பக்தியும், மரியாதையும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்று இல்லாமல், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் நன்கொடை வழங்கலாம், அது ஏற்கப்படும்.
நான் கூறிய நபர் ஒன்றுக்கு ரூ.10 , குடும்பத்துக்கு ரூ.100 என்பது வெறும் யோசனைதான். ஆனால், நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
கோயில் கட்டுமானத்துக்குத் தேவைப்படும் நிதியை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்க இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை, அடுத்தவாரம் நடக்கும் ராமர் கோயில் பூமி பூஜை, கட்டுமானத்துக்கான செலவு ரூ.300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி நடக்கும் மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1000 கோடி தேவைப்படும். நாடு முழுவதும் ராமர் கோயிலுக்கான நிதி திரட்டும் ஒருமாத நிகழ்ச்சி வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் தொடங்கும் என்று நினைக்கிறேன்'' என்று விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி தெரிவித்தார்.