பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம் 
இந்தியா

கார்கில் போர் வெற்றி தினம்: நமது ராணுவ வீரர்களின் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது: பிரதமர் மோடி, அமித் ஷா புகழாரம்

பிடிஐ

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி நாளில் நமது வீரர்களின் துணிச்சலையும், மனஉறுதியையும் நினைவுகூர்கிறேன். நமது வீரர்களின் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் தொடங்கி ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆப்ரேஷன் விஜய் எனும் பெயரில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை , பாகிஸ்தான் வீரர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து, போரில் வெற்றி தேடித்தந்தது.

ஏறக்குறைய 3 மாதங்கள் வரை நீடித்த கார்கில் போரில் இருதரப்பிலும் பெருத்த உயிரிழப்பு ஏற்பட்டபோதிலும் பாகிஸ்தானுக்கு மோசமான சேதம் ஏற்பட்டது. இந்தியத் தரப்பில் 500-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

கார்கில் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியை கார்கில் வெற்றிதினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கார்கில் போரின் 21-வது ஆண்டு வெற்றிதினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில் “ நம்முடைய கார்கில் வெற்றி நாள் , இந்த நாளில் நமது படை வீரர்களின் துணிச்சலையும், விடாமுயற்ச்சி, மன உறுதியையும் கடந்த 1999-ம் ஆண்டில் துரிதமாக செயல்பட்டு நமது நாட்டை பாதுகாத்ததை நினைவகூற வேண்டும். நமது ராணுவ வீரர்களின் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், #கரேஜ்இன்கார்கில் எனும் ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கார்கில் வெற்றி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவின் சுயமரியாதை, வீரர்களின் வீரரம், உறுதியான தலைமை ஆகியவற்றை கார்கில் வெற்றிதினம் உணர்த்துகிறது.

வீழ்த்த முடியாத வீரம், கடினமான கார்கில் மலையிலிருந்து எதிரிகளை விரட்டி, மீண்டும் மூவர்ணக்கொடியை பறக்கவிட்ட, துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். பாரதத்தாயின் நிலத்தை பாதுகாத்த இந்திய ஹீரோக்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT