உத்திரப்பிரதேசத்தின் கான்பூரை அடுத்து கோண்டாவிலும் ஆள்கடத்தல் நடைபெற்றுள்ளது. இதில் பிணையத்தொகையாக ரூ.4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோண்டாவின் ஷாபூரை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் பாண்டேவின் 8 வயது மகன் நேற்று கடத்தப்பட்டான். கடத்தப்பட சில மணி நேரங்களில் சூரஜ் பாண்டேவிடம் ரூ.4 கோடி பிணையத்தொகை கேட்டு போன் செய்யப்பட்டிருந்தது.
இதனால், உடனடியாக கோண்டா காவல்ட்நிலையத்தில் சூரஜ் பாண்டே புகார் செய்துள்ளார். இந்த புகாரை பெற்ற கோண்டா போலீஸார், உ.பி.யின் அதிரடிப் படையினருடன் (எஸ்டிஎப்) அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இதன் பலனாக 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டதுடன் அதன் குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சூரஜ் பாண்டேவின் உடன் பிறந்தவரான ராஜ் பாண்டே முக்கிய குற்றவாளியாக சிக்கியுள்ளார்.
இவர், ஒரு பெண் உட்பட உள்ளூர் ரவுடிகளுடன் இந்த பாதகச் செயலை செய்துள்ளார். இதில் எஸ்டிஎப்பினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகளின் கால்களில் குண்டு பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி.யின் ஏடிஜியான பிரஷாந்த் குமார் கூறும்போது, ‘‘உ.பி. சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் வீட்டிற்குள் நுழைந்து சிறுவனை கடத்தி உள்ளனர்.
புகார் கிடைத்த மறுநிமிடமே கோண்டாவின் எல்லைகளை சீல் வைத்து சோதனையில் இறங்கினோம். இந்த வழக்கில் திறம்பட செயலாற்றிய உ.பி. படையினருக்கு ரூ.1 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதமாக உ.பி.யின் கான்பூரில் நடந்த 2 முக்கிய குற்றச்செயல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
இதில் ஒன்றாக தன்னை கைது செய்யவந்த 8 போலீஸாரை சுட்டுகொன்ற விகாஸ் துபே மற்றும் பிணையத்தொகைக்காகக் கடத்தி கொலைசெய்யப்பட்ட இளைஞர் சஞ்சீத் யாதவ் வழக்கும் உள்ளன.
ஆள்கடத்தல் வழக்கில் சஞ்சீத் யாதவ் கொல்லப்படக் கான்பூர் போலீஸார் கவனக்குறைவு காரணம் என அதன் 11 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை பாடமாகக் கொள்ளும் வகையில் அருகிலுள்ள கோண்டாவில் உ.பி. காவல்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது.