முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா : கோப்புப்படம் 
இந்தியா

உங்களுக்கு பெரும்பான்மை இருந்தால் எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தேவைப்படுகிறது? அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கேள்வி

பிடிஐ

உங்களுக்கு பெரும்பான்மை இருந்தால் எதற்காக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக்கெலாடடுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் சச்சின் பைலட் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் பெரும்பான்மையில்லாத அரசு என்று அசோக் கெலாட் அரசை பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட அரசு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று மாலையில் சென்று முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துப்பேசியும் அவர் பேரவையைக் கூட்டுவதற்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சட்டப்பேரவையைக் கூட்டக் கோரி மாநில அரசு சார்பில் கடந்த 23-ம்தேதி கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அரசு அனுப்பிய அந்த கடிதத்தில் சட்டப்பேரவையை எந்த தேதியில் கூட்ட வேண்டும் என்ற குறிப்பு ஏதும் இல்லை.

அந்த அடிப்படையில் சட்டப்பேரவையைக் கூட்டுகிறோம், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் ஏதும் இருக்கிறதா என்பது குறித்த தகவலும் அதில் இல்லை.

சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணமும், எந்த திட்டமும் அந்தக் கடிதத்தில் இல்லை.

பொதுவாக சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு கடிதம் வழங்கியபின் 21 நாட்கள் வரை கட்டாயம் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எம்எல்ஏக்கள் சுதந்திரமாகவும், எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி செயல்படுவதையும் சட்டப்பேரவை கூட்டப்படும் முன் முடிவு செய்ய வேண்டும்.

ஆதலால், கரோனா வைரஸ் பரவும் இந்த காலக்கட்டத்தில் எந்த அடிப்படையில் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அரசு விளக்க வேண்டும். பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் எதற்காக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புக்கு முன் உயர்ந்தவர் யாருமில்லை. எந்தவிதமான அழுத்தத்தற்குரிய அரசியலும் இருக்கக்கூடாது. அரசின் எந்தவிதமான நடவடிக்கையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பும், அது தொடர்பான வழிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT