இந்தியா

கேரளா முழுவதும் முழு ஊரடங்கு?- மாநில அமைச்சரவை 27-ம் தேதி முடிவு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரளா முழுவதும்முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதா என்பது குறித்து வரும் 27-ம் தேதி மாநில அமைச்சரவை முடிவு செய்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று, ஒற்றை இலக்கத்தில் இருந்தது. கடந்த மாதம் முழுவதும் புதிய வைரஸ் தொற்று 100-ஐ தாண்டாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்று ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 22-ம் தேதி முதல்முறையாக ஆயிரத்தை தாண்டியது. இது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் 3 அடுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இது முதல் அடுக்காகும்.

மளிகை, காய்கறி, மருந்து கடைகள் செயல்படுகின்றன. ஆனால் பொதுமக்கள் கடைகளுக்கு நேரடியாக செல்ல அனுமதியில்லை. போலீஸார் மற்றும் தன்னார்வலர்களுக்கு செல்போன் வாயிலாக தங்களது தேவைகளை கூறினால் வீட்டுக்கே நேரடியாக பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இது 2-வது அடுக்காகும்.

மேலும் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பவர்களை கண்காணிக்க அந்த வீடுகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இது 3-வது அடுக்காகும்.

திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 28-ம்தேதி வரை இந்த 3 அடுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே வரும் 27-ம் தேதி கேரள அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கேரளா முழுவதும் 3 அடுக்கு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

SCROLL FOR NEXT