இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளி மனோகர் ஜோஷியின் வாக்குமூலம் பதிவு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அங்கு பெரும் கலவரம் மூண்டது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேர் மீதுசிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பான விசாரணை, லக்னோ வில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்தவழக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து வைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, காணொலி காட்சி முறையில்இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இதில், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் முன்பு காணொலி முறையில் நேற்று ஆஜராகி, தனது வாக்குமூலத்தை அளித்தார். அதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இதேபோல, அத்வானியின் வாக்குமூலம் இன்று பெறப்படவுள்ளது.

SCROLL FOR NEXT