இந்தியா - சீனா எல்லையில் கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில், வீரமரணம் அடைந்த தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு துணை மாவட்ட ஆட்சியர் பணிக்கான நியமன உத்தரவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.
கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த மோதலில் வீரமரணம் அடைந்தவர் களில் தெலங்கானா மாநிலம் சூரியாபேட்டை யைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபு (39) என்பவரும் ஒருவர். இவருக்கு சந்தோஷி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். சந்தோஷ் பாபு மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது குடும்பத் துக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும், சந்தோஷ் பாபுவுடன் உயிரிழந்த பல மாநிலங்களைச் சேர்ந்த 19 ராணுவ வீரர் களுக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இதுதவிர, சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு ஹைதராபாத்தில் வீட்டு நிலப்பட்டாவும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, கர்னல் சந்தோஷ்பாபுவின் மனைவி சந்தோஷி மற்றும் அவரது குடும் பத்தினர் நேற்று முன்தினம் ஹைதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் முதல்வரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு, அவர்களை வரவேற்ற முதல்வர் சந்திரசேகர ராவ், பின்னர் அவர் களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
20 கோடி மதிப்புள்ள வீட்டுமனை
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரூ.20 கோடி மதிப்புள்ள வீட்டுமனைப் பட்டாவை சந்தோஷியிடம் முதல்வர் வழங்கினார். அத்துடன், மாவட்ட துணை ஆட்சியராக சந்தோஷியை நியமித்து, அதற்கான நியமன உத்தரவையும் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.
‘‘நாட்டுக்காக தன்னுயிரை தந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு தெலங் கானா அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்’’ என உறுதி அளித்த முதல்வர், சந்தோஷி உள்ளிட்ட குடும்பத்தினரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். நிதியுதவி, வீட்டு மனைப்பட்டா மற்றும் பணி நியமன ஆணை வழங்கிய முதல்வருக்கு கர்னலின் குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.