இந்தியா

கேரளாவில் 3-ம் கட்ட நோய்ப் பரவல்; இன்று 1,078 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கா.சு.வேலாயுதன்

தற்போது கேரளா நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இன்று 1,078 பேருக்கு நோய்த்தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று 1,078 பேருக்கு நோய்த்தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கேரளாவில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,110 ஆகும்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 798 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பு இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 65 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 104 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 115 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த 57 வயதான கோயாட்டி, மூவாற்றுப்புழையைச் சேர்ந்த 79 வயதான லட்சுமி, பாறசாலையைச் சேர்ந்த 73 வயதான ரவீந்திரன், கொல்லத்தைச் சேர்ந்த 58 வயதான ரஹியானத் மற்றும் கண்ணூரைச் சேர்ந்த 60 வயதான சதானந்தன் ஆகிய 5 பேர் இன்று கரோனா பாதித்து மரணமடைந்தனர். இதில் ரஹியானத் தவிர மற்றவர்களுக்கு கரோனா மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு நோய்கள் இருந்தன. இன்று 432 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,596 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,458 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 222 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 106 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 100 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 89 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 83 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 82 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 80 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 67 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 63 பேர் இடுக்கி மாவட்டத்தையும், தலா 51 பேர் பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 47 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 27 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 10 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 32 பேருக்கு நோய் பரவியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 22,433 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,58,117 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,48,763 பேர் வீடுகளிலும், 9,354 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,070 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 3, 28,940 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 9,159 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,07,066 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,02,687 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது 428 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

கேரளாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. இன்று நோய் பாதிக்கப்பட்ட 222 பேரில் 100 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 16 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோய் பரவி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய் பரவி வருவது கவலை அளிக்கிறது. எம்எல்ஏ உள்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

கேரளாவில் தொடக்கத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வரத் தொடங்கிய பின்னர்தான் நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், நாம் முகக் கவசங்களை அணிவது, கைகளைக் கழுவுவது உள்பட நிபந்தனைகளைப் பின்பற்றி நோய்ப் பரவலை பெருமளவு கட்டுப்படுத்தினோம். மக்கள் பிரதிநிதிகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் தற்போது நோய்ப் பரவலின் மிக முக்கிய கட்டத்தில் உள்ளோம். தற்போது மிக மோசமான நிலைமையை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். எனவே, அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும்.

தற்போது கேரளா நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இனி வரும் காலகட்டம் மிகவும் மோசமாக இருக்கும். யாருக்கு, எப்படி நோய் பரவும் எனக் கணிக்க முடியாது. எனவே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இப்போது நாம் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் அடுத்த கட்டத்தைப் பாதுகாப்பாகக் கடக்க முடியும்.

இன்னும் ஒரு சில நாட்களில் பக்ரீத் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. கரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தயார் என்று அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தொழுகையைப் பள்ளிவாசலில் நடத்த அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் தொழுகை நடத்தப்பட மாட்டாது என்றும் மதத் தலைவர்கள் உறுதியளித்தனர். பள்ளிவாசல்களில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கேரளாவில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும் தற்போது கேரளாவில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

SCROLL FOR NEXT