இந்தியா

கரோனா பாதிப்பு;  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7.82 லட்சமாக உயர்வு

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,82,606-ஐ எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இரண்டாவது நாளாக, ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,557 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,82,606-ஐ எட்டியுள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 63.18 விழுக்காடாக உள்ளது. கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்தவாறு உள்ளது. அதாவது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட, 3,56,439 பேர் அதிகமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் கொவிட்-19 நிர்வாக முறைகளால், தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் வல்லுனர் குழு, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் உள்ளிட்டோர் இந்த நடைமுறைகளை வழிநடத்துகின்றனர்.

மத்திய அரசு, கொவிட் தொற்று நோயாளிகள் அதிகமுள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்தியக் குழுக்களை அனுப்பி கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இத்தகைய தொடர் முயற்சிகளால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 2.41 விழுக்காடாக உள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,26,167 ஆகும்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT