இந்தியா

கர்நாடகாவில் கரோனா அதிகரிப்பத‌ற்கு எடியூரப்பாவின் அலட்சியமே காரணம்: சித்தராமையா குற்றச்சாட்டு

இரா.வினோத்

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை நீக்கி இருப்பது தவறானது. கரோனா தொற்று அதிகரிப்பதற்கு எடியூரப்பாவின் அலட்சியமே காரண‌ம் என முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கர்நாடகாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 250 பேர் பாதிக்கப்பட்டபோதே ஊரடங்கை அமல்படுத்தி இருந்தார்கள். இப்போது நிலைமை கையை மீறிப் போய்க்கொண்டிருக்கும்போது ஊரடங்கு உத்தரவை நீக்கி இருக்கிறார்கள்.

பெங்களூரு, கல்புர்கி, மைசூரு, உடுப்பி உள்ளிட்ட கரோனா அதிகமாக பாதித்துள்ள மாவட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொற்று அதிகரிக்கும். எனவே 14 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர் மதுசாமி, சமூகப் பரவல் ஆரம்பித்துவிட்டது என கடந்த வாரம் எச்சரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு இனி கர்நாடகாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்வர் எடியூரப்பா ஊரடங்கை விலக்கி இருக்கிறார். மக்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இனி ஊரடங்கே கிடையாது எனக் கூறுகிறார். ஆனால், மக்கள் மிகவும் அச்சத்தோடு வாழ்கிறார்கள். பேருந்துகள், வணிக வளாகங்கள் இயங்கினாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கிறது.

பெங்களூருவில் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கின்றனர். செயற்கை சுவாசக்கருவி தட்டுப்பாடு நிலவுகிறது. பெங்களூரு சர்வதேச கண்காட்சித் திடலில் ஆசியாவிலே பெரிய தற்காலிக மருத்துவமனை தயாராக இருப்பதாக எடியூரப்பா சொல்கிறார். 10,100 படுக்கை வசதிகளுடன் தயார் செய்யப்பட்டிருக்கும் அந்தச் சிகிச்சை மையத்தில் இதுவரை 100 மருத்துவர்கள், செவிலியர்கள்கூடப் பணி அமர்த்தப்படவில்லை. கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடுவேன்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் எடியூரப்பா அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளது. கரோனா அதிகரித்து வருவதற்கு எடியூரப்பாவின் அலட்சியமே காரணம். அரசின் அலட்சியத்தால் நோயாளிகள் பலியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இனியும் எடியூரப்பா விழித்துக்கொள்ளாவிடில், கர்நாடகாவை யாராலும் காப்பாற்ற முடியாது''.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT