இந்தியா

உ.பி.யின் தியோபந்த் மதரஸாவின் பக்ரீத் கோரிக்கை: மசூதிகளில் தொழுகை நடத்தவும், குர்பானிக்கு ஆடுகள் விற்பனைக்கும் அனுமதி கேட்டு முதல்வர் யோகிக்கு கடிதம்

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசத்தின் தாரூல் உலூம் மதரஸாவினர் பக்ரீத்திற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், அப்பண்டிகைக்காக குர்பானி ஆடு விற்பனையும், மசூதிகளில் தொழுகைக்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களின் முக்கியத் திருநாள்களின் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் ஆகஸ்ட் 1 சனிக்கிழமையில் வர உள்ளது. இதில் தம் பகுதியின் மசூதிகளில் பலருடன் ஒன்றாக இணைந்து சிறப்புத் தொழுகையை முஸ்லிம்கள் நடத்துவார்கள்.

பிறகு தம் மதக்கடமையை நிறைவேற்ற ஆடு, எருமை மற்றும் ஒட்டகங்களை அவர்கள் பலி கொடுப்பதும் வழக்கம். இதற்கு தடையாக உபியில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதன் மீதான ஊரடங்கு விதிகள் அமலாகி உள்ளன.

இது, உபியில் சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் 2 வாரங்களாக அமலாகி வருகின்றன. இதில் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளுக்கும், அனைத்து வழிப்பாட்டு தலங்களில் ஐந்திற்கும் மேற்பட்டோர் கூடவும் தடை உள்ளது.

இந்நிலையில், சமூகவிலகலுடன் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்தவும், குர்பானிக்கான ஆடுகள் விற்பனைக்கான சந்தை நடத்தவும் உபி முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு உபியின் தியோபந்திலுள்ள தாரூல் உலூம் மதரஸாவினர் கடிதம் எழுதியுள்ளனர். இது, இந்திய முஸ்லிம்களால் பெருமளவில் மதிக்கப்படும் பழம்பெரும் மதரஸாவாக உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தாரூல் உலூம் மதரஸாவின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வார இறுதி நாட்களை புதன், வியாழக்கிழமைகளுக்கு என ஒருமுறைக்காக ஒத்தி வைக்க கோரியுள்ளோம்.

சமூகவிலகலுடன் ஐந்திற்கும் அதிகமானவர்களை மசூதிகளில் தொழுக்கைகாக அனுமதிக்கவும் கேட்டிருக்கிறோம்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, உபியின் பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பிலும் தம் ஆட்சியர்களிடம் பக்ரீத் மீதான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதிலும், ஆடுகள் விற்பனை மற்றும் ஒன்றுகூடி தொழுகை நடத்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், முஸ்லிம்களின் மற்றொரு முக்கியப் பண்டிகையான ரம்ஜானும் ஊரடங்கு காலத்தில் கொண்டாடப்பட்டிருந்தது. அதில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளை வீடுகளில் தொழுவது போல் ரம்ஜானிலும் செய்யலாம் என தாரூல் உலூம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT