அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் ்பணியை மேற்பார்வையிட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி நேற்று கூறியதாவது:
அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட் டு விழா நடைபெறும். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். அதற்கு முன்பாக அவர் ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலைக்கும் அனுமன் ஆலயத்திலும் பூஜை நடத்தி வழிபடுவார். இவ்விழாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதல்வர்கள் உட்பட 150 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இவர்களைச் சேர்த்து மொத்தம் 200 பேர்மட்டுமே இவ்விழாவில் பங்கேற்பார்கள். கரோனா வைரஸ் தொற்றுபிரச்சினை காரணமாக தனி மனிதஇடைவெளியை கடைப்பிடிக்கவேண்டியது கட்டாயம் என்பதால் இந்த நிகழ்ச்சியில் குறைவான நபர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிந்த் தேவ் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் அழைப்பு விடுக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.