லடாக் எல்லையில் சீன வீரர்கள் சமீபத்தில் அத்துமீறி நுழையமுயன்று போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். இந்த பின்னணியில் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், அணிசேரா கொள்கை குறித்தும் அமெரிக்காவிடம் இருந்து விலகியிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் அளித்த பதிலில் கூறியதாவது:
அணி சேரா இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தோடு தொடர்புடையது. 1950, 60-களில் சுயசார்போடு செயல்படுவது, எந்தப் பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.
இப்போது நிலைமை அப்படி இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்தியாவிடம் பலரும் உதவி கோருகின்றனர். இனியும் யாரோ ஒருவராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியாவும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் களத்தில் இறங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தென்சீனக் கடல் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு எதிராக,நட்பு நாடுகளோடு இணைந்து இந்தியா செயல்படும் என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.