இந்தியா

திருப்பதியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

என்.மகேஷ்குமார்

திருப்பதி மற்றும் திருமலையில் கரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை திருமலையில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 170 பேருக்கும், 20 அர்ச்சகர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கோயிலின் 2 ஜீயர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்தை தொடரலாமா? என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆலோசிக்க தொடங்கி உள்ளது.

இதனிடையே, திருப்பதி நகரில் கரோனா தொற்று வேகமாக பரவுவதால், காலை 11 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண குப்தா அறிவித்தார். இது வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி திருப்பதி நகரம் வெறிச்சோடியது. ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பைபாஸ் சாலை வழியாக நேரடியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வாகனங்களை சுமக்கும் ஊழியர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று ஒரு நாள் பத்மாவதி தாயார் கோயில் தற்காலிகமாக மூடப்பட்டது. கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, இன்று முதல்வழக்கமாக செயல்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் தினமும் வெறும் 7ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசித்து வந்தனர். இந்நிலையில், தற்போது திருப்பதியில் கரோனா தொற்று பெருகுவதால் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை காலை 11 மணிக்கு பின்னர் ஊரடங்கு அமல்படுத்துவதால், திருப்பதியில் மாதவம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் செய்து வந்தசர்வ தரிசன டோக்கன் விநியோகத்தை தேவஸ்தானம் நேற்று முதல் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி சர்வ தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டதால், நேற்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

SCROLL FOR NEXT