ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மணீஷ் மேத்தா கூறும்போது, “பூஞ்ச் மற்றும் பாலகோட் (ரஜவுரி) செக்டார்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியத் தரப்பில் சேதம் ஏதுமில்லை. எனினும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி தரப்பட்டது” என்றார்.
இதனிடையே காஷ்மீரில் லஷ்கர் இ தாய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இர்ஷாத் என்ற இத்தீவிரவாதி, புல்வாமா மாவட்டம் காக்கபோரா பகுதியைச் சேர்ந்தவர். 2013-ல் ஹைதர்போராவில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இர்ஷாத் கொல்லப்பட்டார். இது பாதுகாப்பு படையினருக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.