கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு மீதும், கரோனா வைரஸ் பாதிப்பு மீதும் மத்திய அரசும், மாநில அரசும் அதிகமான அக்கறை காட்ட வேண்டும். கோயில் கட்டினால் கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என சிலர் நினைக்கிறார்கள் என்று மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மறைமுகமாகச் சாடியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை மறைமுகமாகக் குறிப்பிட்டு சரத் பவார் பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா வைரஸ் பரவலை நாடு முழுவதும் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வேண்டும்.
தொழில்துறையினர், வர்த்தகம் செய்யும் பிரிவினர் லாக்டவுனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
ஆனால், நாட்டின் பொருளாதாரம் சிக்கலாக இருந்து வரும்போது, சிலர் கோயில் கட்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ராமர் கோயில் கட்டினால் கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்றால் உறுதியான கட்டுமானத்தை அவர்கள் தொடங்கலாம், வரவேற்கலாம்.
எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை எப்போதும் சிந்திக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் நம்முடைய முக்கியத்துவம் என்பது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமடையச் செய்வதாகும். கோயில் கட்டி முடித்துவிட்டால் கரோனா போய்விடும் என சிலர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான நான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். உங்களிடம் இருந்துதான் இதைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
எங்களுக்கு, கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதுதான் முக்கியம். ஏனென்றால், கரோனா வைரஸால் லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. பொருளாதார அமசங்களை, வளர்ச்சியை நினைத்துக் கவலை கொள்கிறோம். சிறுவியாபாரிகள், தொழில்நடத்துவோர் படும் கஷ்டங்களைப் பார்க்கிறோம். அதனால்தான் மத்திய அரசும், மாநில அரசும் கூடுதல் அக்கறையுடன் கரோனா பரவலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சரத் பவார் தெரிவித்தார்.
இதுகுறித்து மகாராஷ்டிரா பாஜக மேலவை எம்எல்சி உறுப்பினர் பிரவிண் தரேகர் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசை உருவாக்கியவர் சரத் பவார் என்கிறார்கள். ஆனால், அவர் ராமர் கோயில் கட்டுவதைப் பற்றிக் குறை சொல்கிறார். ஆனால், அவர்கள் கட்சியின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே கரோனா ஒழிய ராமரிடம் பிரார்த்தனை செய்வது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ராமர், ராமர் கோயில் இரண்டும் எங்கள் கட்சியின் நம்பிக்கை. இந்த விஷயத்தில் எந்த அரசியலும் செய்யக்கூடாது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தீவிரமாக முழங்கியது சிவசேனா கட்சி. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் முன் ராமர் கோயில் சென்றுவிட்டுதான் வந்தார். மக்களின் சுகாதாரம், கரோனாவிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை சிவசேனா தலைமையிலான அரசு வழங்கும். ராமராஜ்ஜியத்தை வழங்கும்” எனத் தெரிவித்தார்.