ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றுவோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் உலக அரசியல் தலைவர்களில் அதிகம் பேரால் பின்பற்றும் 3-வது தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி பதவி வகித்த போது, கடந்த 2009-ம் ஆண்டு ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். அதன்பின், கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமர் பதவியேற்ற பிறகு, அவரது செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது. அதன்பின், ட்விட்டரில் மோடியைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வந்தது. தற்போது மோடியை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை நேற்று 6 கோடியைத் தாண்டியது. அத்துடன், இந்தியாவில் அதிகம் பேரால் பின்பற்றப்படும் தலைவராக மோடி இருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை, ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 12 கோடியாக உள்ளது. அவர்தான் ட்விட்டரில் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை 8.3 கோடி பேர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர். உலக அரசியல் தலைவர்களில் 3-வது நபராகப் பிரதமர் மோடி திகழ்கிறார். அதேநேரத்தில் உலகளவில் பார்க்கும் போது, பிரதமர் மோடி 15-வது இடத்தில் இருக்கிறார்.
ஒபாமா, ஜஸ்டீன் பீபர், கேத்தி பெர்ரி,ரிஹானா, டெய்லர் ஸ்விப், கிறிஸ்டியானோ ரொனால்டோ, டொனால்டு ட்ரம்ப், லேடி காகா, எலன் டிஜெனர்ஸ், அரினா கிரேண்ட் ஆகியோர் ட்விட்டரில் முதல் 10 இடத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவோராக உள்ளனர்.