கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்தஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அப்போது சீன தரப்பில் 350 வீரர்களும் இந்திய தரப்பில் 50 வீரர்களும் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் பிஹார் படைப்பிரிவு 16-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், சீன வீரர்களை தீரமுடன் எதிர்கொண்டு விரட்டியடித்தனர். இதில் தெலங்கானாவை சேர்ந்தகர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்துள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது.
பிஹார் படைப்பிரிவு 16-வது பட்டாலியனின் வீரத்தை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டி உள்ளனர். கடந்த சில நாட்களாக லடாக் எல்லைப் பகுதிகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிஹார் படைப்பிரிவு 16-வது பட்டாலியன் வீரர்களை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இந்த வீடியோவை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீரர்களுடன் கைகுலுக்கியும் தோளில் தட்டிக் கொடுத்தும் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத அரண், மத்தியஅரசின் உறுதியான நிலைப்பாடு, ராஜதந்திர நடவடிக்கைகளால் லடாக் எல்லையில் இருந்து சீன வீரர்கள் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "எல்லை பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும் என்பதற்கு எவ்விதஉத்தரவாதமும் கிடையாது" என்று தெரிவித்தார்.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லடாக் எல்லையில் இந்தியராணுவமும் விமானப் படையும் இணைந்து போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. அந்தமான் கடல் பகுதியில் இந்திய கடற்படை மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி வருகிறது.