உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5-ம்தேதி பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமர் கோயில் பூமி பூஜைக்கான பணியில் ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீவிரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்குவது குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சனிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்த்தியா கோபால் தாஸ் அன்றைய கூட்டத்தில் கூறுகையில், பூமி பூஜைக்காக 40 கிலோ எடையுள்ள வெள்ளியில் செங்கல் வைத்து வழிபட்டு பூமி பூஜையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், “ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது உறுதிதான். ஆனால், தேதி இன்னும் முடிவாகவில்லை.
பெரும்பாலும் பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பூமி பூஜையில் பங்கேற்கவே வாய்ப்புள்ளது. இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார். பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரின் வருகைக்கான தேதி மட்டும் இன்னும் பிரதமர் அலுவலகத்திலிருந்து கூறப்படவில்லை.
பூமி பூஜைக்கான பல்வேறு பூஜைகள் முடிந்தபின் ராம் லல்லா சிலைகள் (ராமரின் குழந்தைப் பருவ சிலைகள்) தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.