இந்தியா

காதலிக்காக எல்லை தாண்ட முயன்ற இளைஞர்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத்தைச் சேர்ந்தவர் சித்திக் முகமது ஜீஷன் (20). பேஸ்புக் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் சித்திக்குக்கு நண்பரானார். இது காதலாகமாறியுள்ளது. ஒரு கட்டத்தில் காதலியைப் பார்க்க மகாராஷ்டிராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் குஜராத்துக்குச் சென்றார். அங்கிருந்து கட்ச் பகுதி வழியாக எல்லையைத் தாண்ட முடிவு செய்தார். கட்ச் பகுதியில் ரான் ஆப் கட்ச் என்று சதுப்பு நில பிரதேசம் உள்ளது. இதன் வழியாகதான் எல்லையைத் தாண்ட வேண்டும். ஆனால் அந்த வழியே நடந்து மட்டுமே செல்ல முடியும்.

கடந்த வியாழக்கிழமை அப்பகுதி வழியாக சித்திக் சென்ற போது அவரை எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸார் (பிஎஸ்எப்) மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானில் உள்ள காதலியைப் பார்க்கச் செல்வது தெரிந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சித்திக்குக்கு பாகிஸ்தானின் பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. காதலியிடம் இருந்து மட்டும் அழைப்பு வந்தால் ஒரு எண்ணில் இருந்து மட்டுமே வந்திருக்க முடியும். பல்வேறு எண்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளதால் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாகவும் துணை ராணுவப் படை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். - பிடிஐ

          
SCROLL FOR NEXT