கரோனாவில் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தை(Bacille Calmette Guerin (BCG) ) செலுத்தினால் கரோன தொற்றில் பாதிக்கப்படுவது குறையுமா, உயிரிழப்பு தடுக்கப்படுமா என்பது குறித்து இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்) பன்முக ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த ஆய்வு தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் ஆரோக்கியமாக இருக்கும் 60 வயது முதல் 95 வயதுள்ளவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் கீழ் வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி மையம்(என்ஐஆர்டி) இந்த ஆய்வை நடத்த உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து இந்த ஆய்வை என்ஐஆர்டி நடத்த உள்ளது.
இது தவிர, அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த், போபாலில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் சுகதாார ஆய்வு நிறுவனம், மும்பையி்ல் உள்ள ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி, கேஇஎம் மருத்துவமனை, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஜோத்பூரில் உள்ள என்ஐஐஆர்என்டி மருத்துவமனை ஆகியவற்றில் பிசிஜி தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள என்ஐஆர்டி இயக்குநர் மருத்துவர் சுபாஷ் பாபு கூறுகையில் “ காசநோய்க்கு வழங்கப்படும் தடுப்பு மருந்தான பிசிஜி தடுப்பு, முதியோர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வாறு இருக்கும், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கிறதா, உயிரிழப்பைக் குறைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம். சென்னை உள்பட 6 மாநிலங்களி்ல இந்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த பிசிஜி தடுப்பு மருந்து நம்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தபரிசோதனையின் நோக்கமே, கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு இந்த மருந்தைச் செலுத்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தடுக்கப்படுமா , உயிரிழப்பு தடுக்கப்படுமா என்பது குறித்துதான்.
பிசிஜி மருந்தின் அளவைப் பொருத்து குழந்தைகள், வயது வந்தோர் ஆகியோருக்கு சுவாசம் தொடர்பான தொற்றைத் தடுக்கமா என்பதும் ஆய்வு செய்யப்படும். பொதுவாக பிசிஜி மருந்தால் முதியோர்கள் இறப்பு என்பது தடுக்கப்படும் என நம்பப்படுகிறது. உலகளவில் முதியோர்களுக்கு இந்த மருந்து அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ” எனத் தெரிவித்தார்
இந்தப் பரிசோதனையில் 60 வயது முதல் 95 வயதுள்ள ஆரோக்கியமான 1450 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பிசிஜி மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இதில் 725 பேருக்கு தடுப்பு மருந்து இல்லாமல் எவ்வாறு இருக்கிறார்கள், சமாளிக்கறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் இருந்து 60 வயது முதல் 80 வயதுள்ளவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த மருந்து செலுத்தப்பட்ட பின் அடுத்த 6 மாதங்களுக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.