கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை(20ம்தேதி) முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க எய்ம்ஸ் நெறிமுறைக் குழு அனுமதியளித்துள்ளது.
இதற்காக ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்குச் செலுத்தி இந்த கோவாக்ஸின் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட12 மருத்துவமனைகளை ஐசிஎம்ஆர் தேர்வு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 375 தன்னார்வலர்கள் மூலம் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது, அதில் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை முதல் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க எய்ம்ஸ் நெறிமுறைக் குழு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் சமுதாய மருந்துப்பிரிவின் பேராசிரியரும், மருத்துவரான சஞ்சய் ராய் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
“ உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க எயம்ஸ் நெறிமுறைக் குழு அனுமதியளித்துள்ளது. நீண்ட கால நோய்கள் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் தன்னார்வலர்களாக இந்த பரிசோதனைக்கு வரவேற்கப்படுகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடாது.
இந்த பரிசோதனையில் பங்கேற்க சில தன்னார்வலர்கள் முன்கூட்டியே பதிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு முறைப்படி பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களின் உடல்நிலை ஆய்வு செய்யப்பட்டு, திங்கள்கிழமை முதல் கோவாக்ஸின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்படும்.
யாரேனும் இந்த மருந்து பரிசோதனையில் பங்கேற்க விரும்பினால், Ctaiims.covid19@gmail.com என்ற மின் அஞ்சலுக்கும் அல்லது 7428847499 என்ற இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும், அழைத்துப்பேசியும் பதிவு செய்யலாம். ஒட்டுமொத்தமாக 375 தன்னார்வலர்கள் இந்த சோதனைக்காக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இதில் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மற்றவர்கள் மற்ற 11 மருத்துவமனைகளிலும் பரிசோதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பாட்னா, ரோடக் உள்ளிட்ட நகரங்களில் மருந்தின் பரிசோதனை தொடங்கிவிட்டது” இவ்வாறு ராய் தெரிவித்தார்