நாட்டில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொல்கத்தாவிலிருந்து சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு பயணிகள் விமானச் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு 10.30 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. 26 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதே பாதிப்பு மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது, உயிரிழப்பு 1,049 ஆக அதிகரித்துள்ளது. விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதிய மேற்கு வங்க அரசு, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 6 முக்கிய நகரங்களுக்கு கொல்கத்தாவிலிருந்து விமானப் போக்குவரத்தை இயக்க வேண்டாம் என்று இம்மாதத் தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, கொல்கத்தாவிலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், நாக்பூர் ஆகிய 6 கரோனா ஹாட்ஸ்பாட் நகரங்களுக்கு விமானச் சேவை கடந்த 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை (நாளை) ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடை இந்த மாதம் இறுதிவரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், நாக்பூர் ஆகிய 6 நகரங்களுக்கு விமானச் சேவை இந்த மாதம் 31-ம் தேதிவரை இயக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளது.