மும்பையில் உள்ள ஹிராநன்தனி தனியார் மருத்துவமனையில் சிவ சேனா தலைவர் நிதின் நந்த்கோங்க்கர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது.
அதாவது மருத்துவமனை தீட்டிய ரூ.8 லட்சம் பில் தொகையைக் கட்டி உடலை எடுத்துச் செல்லுமாறு தனியார் மருத்துவமனை இறந்த நோயாளியின் குடும்பத்தை நிர்பந்திக்க, சிவசேனாவின் நிதின் நந்த்கோங்க்கர் புகுந்து ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனையை குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்கச் செய்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட அங்கு செய்தியாளர்கள் குவிந்தனர், அப்போது சிவசேனா தலைவர் நிதின் கூறியபோது, “எனக்குத் தெரிந்த ஒரு நபரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவரின் தந்தை ஆட்டோ ட்ரைவர் சில வாரங்களுக்கு முன்பாக கரோனா காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கரோனா அவர் உயிரைப் பலி வாங்கியது.
சிகிச்சைக்காக குடும்பத்தினர் ஏற்கெனவெ 1.75 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டனர். அவர்களால் நோயாளியையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ரூ.8 லட்சத்துக்கான பில்லை மட்டும் நீட்டியுள்ளார்கள், இதைக் கட்டினால் உடலை தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
உடனே நான் மருத்துவமனைக்கு வந்து என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். நான் ஏற்கெனவே தனியார் மருத்துவனைகளின் கொள்ளை பற்றி தலைவருக்கு (முதல்வர் உத்தவ் தாக்கரே) எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலித்து வருகின்றனர் இது சட்ட விரோதமானது.
எல்லா தனியார் மருத்துவமனைகளையும் எச்சரிக்கிறோம் இப்படிப்பட்டச் செயல்களை தவிருங்கள் இல்லையெனில் சிவசேனா ரோந்து வருவதன் மூலம் இதை கையாளும்” என்று மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.