மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக நாடுகளுடனான நட்புறவு வலுவாகவும், உயர்ந்த தரத்திலும் இருக்கிறது. சீனாவுடனான அரசியல் உறவும் எந்தவிதமான ஏற்றதாழ்வின்றியே இருக்கிறது. ஆனால், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சரமாரி ட்விட்கள் மூலம் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரி்ல் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு மத்தியஅரசை கடுமையாக விமர்சித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் தொடர்ச்சியான தவறுகள்,பொறுப்பின்மை ஆகியவை தேசத்தை அடிப்படையாகவே பலவீனமாக்கி நம் ஆனிவேரை அசைத்துவிட்டது. வெளியுறவுக்கொள்கையை பராமரிப்பும் கவலை கொள்ளும் விதத்தில் இருக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராகுல் காந்தியின் ஒவ்வொரு கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் ட்விட்டரில் விளக்கமாக பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான பதில்களை நான் அளிக்கிறேன்.
நம்முடைய நட்புறவு நாடுகளுடன் உறவுகள் வலிமையாகவும், சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திலும் இருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் நாடுகளுடன் தொடர்ந்து நாம் மாநாடு நடத்துவதே அதற்கான சாட்சிகளாகும். சீனாவுடான இந்தியா கொண்டிருக்கும் அரசியல் உறவு எந்த விதத்திலும் குறைந்த தரத்துக்கு செல்லவில்லை, சமமாக இருக்கிறது என்பதை சர்வதேச அரசியல்
ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியா தற்போது அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி வருகிறது. சீனா,பாகிஸ்தான் பொருளாதாரச் சாலை(சிபிஇசி), சீனாவின் சாலை திட்டம், தெற்கு சீனக் கடல் விவகாரம், தீவிரவாதிகளுக்கு ஐ.நா. தடைவிதித்தது போன்றவற்றில் இந்தியா வெளிப்படையான கருத்துக்களைத்தான் தெரிவித்து வருகிறது.
ஏதாவது சந்தேகமிருந்தால், ஊடகங்களிடம் கேளுங்கள்.
எல்லைப்பகுதிகளி்ல் காங்கிரஸ் அரசிலும், பாஜக அரசிலும் செய்யப்பட்ட கட்டமைப்புப்பணிகளை ஆதாரங்களுடன் கூறுகிறேன். 2008-14 ஆண்டுகளில் எல்லைக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், 2014-2020 வரை ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறக்குறைய 280 சதவீதம் நிதியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
சாலைக் கட்டமைப்புக்கு 32 சதவீதம், பாலங்கள் அமைக்க 99 சதவீதம், குகைப்பாதை அமைக்க 6 மடங்கு நிதி உயர்த்தியுள்ளோம்.
இதற்கு ஆதாரத்தை நமது ராணுவ வீரர்களிடம் கேளுங்கள்.
நம்முடைய அண்டை நாடு உறவு குறித்த உண்மைகளைச் சொல்கிறேன். இலங்கையின் ஹம்பனோட்டா துறைமுக ஒப்பந்தம் சீனாவுடன் 2008-ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது யார் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தானே.
மாலத்தீவுகளுடன் கடினமான உறவு அப்போது இருந்தது. அதனால்தான், 2012-ம் ஆண்டு அதிபர் நஷீத் அரசு கவிழ்க்கப்பட்டபோது அப்போதைய அரசு வேடிக்கைப் பார்த்தது. இப்போது அந்த நிலைப்பாடு மாறியுள்ளது.
இதை எங்களிடம் கேளுங்கள்.
17 ஆண்டுகளாக நேபாளத்துக்கு எந்த இந்தியப் பிரதமரும் செல்லாமல் இருந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். மின்சக்தி திட்டங்கள், எரிவாயு திட்டங்கள், மருத்துவமனை அமைத்தல், சாலை அமைத்தல், வீடுகள் கட்டுதல் போன்ற பல்வேறு விதங்களில் நேபாளத்துக்கு இந்தியா உதவியுள்ளது.
இதை அந்நாட்டிடமே கேளுங்கள்.
பூடானுடன் வலிமையான நட்புறவு ஏற்பட்டு, வளர்ச்சிக்கான கூட்டுநாடாக இருந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு போல் அல்லாமல், பூடான் மக்கள் சமையல் எரிவாயு குறித்து கவலைப்படுவதில்லை.
அந்நாட்டு பெண்களிடம் கேளுங்கள்.
ஆப்கானிஸ்தானில் சல்மா அணை, நாடாளுமன்றம் கட்டமைப்பு ஆகிய திட்டங்களை இந்தியா முடித்துள்ளது. ராணுவத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் பயிற்சி,சாலைவழித் தொடர்பு போன்றவற்றில் இந்தியா உதவுகிறது.
இதற்கு ஆப்கான் சாலைகளைக் கேளுங்கள்.
பாகிஸ்தான்.. நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கும், மத்திய அரசு கையாளும் உறவுக்கும் வேறுபாடு இருக்கும். பாலகோட், உரித் தாக்குதலில் இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருந்தது, ஷரம் இ ஷேக் ஒப்பந்தம்,ஹவானா, மும்பைத் தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
இதை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.