சோபியான் மாவட்டத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப்படையினர் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கடந்த 24 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம், அம்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை காஷ்மீர் போலீஸார், துணை ராணுவப்படையினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டது.

அதில் ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கவும், அதைக் கையாளவும் திறமை பெற்றவர். கடந்த காலங்களில் பாதுகாப்புப்படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் என்று போலஸீார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போன்றவை கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கிடைத்துள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின், 2-வது செக்டார் கமாண்டர் விகேக் தாக்கூர் கூறுகையில் “ அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்தாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் நம்முடைய ராணுவத்தினர் அந்த திட்டத்தை தொடர்ந்து முறியடித்து, பக்தர்கள் பாதுகாப்பாகச் சென்று, திரும்ப தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT